பெங்களூருவில் அனாதைச் சிறுமிகள் இருவர் கடந்த ஓராண்டாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அந்த கொடூரக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்து தவித்த 11 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளை, அவர்களின் மாமாவே பண ஆசைக்காக கிரண் குமார் நாயக் மற்றும் ஆதித்யா ஆகிய இரு கொடூரர்களிடம் விற்றுள்ளார்.
இந்த நபர்கள் சிறுமிகளைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, அந்த அத்துமீறல்களைத் தங்கள் கைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்து, அதன் மூலம் விரைவாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய சைபர் குற்றப் புகார்ப் பிரிவு அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பெங்களூருவின் சைபர் கமாண்ட் சென்டர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொடூரச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று கைபேசிகளும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டு அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சொந்தப் பிள்ளைகள் போன்ற சிறுமிகளைப் பணத்திற்காகக் காட்டிக்கொடுத்த அந்த மாமாவை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். டிஜிட்டல் தளங்களின் தவறான பயன்பாட்டையும், அனாதைச் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் இந்த கொடூரச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
