சத்தீஸ்கர் மாநிலம், அம்பிகாபூர் அடுத்த பித்திகலா ஹர்ரா திக்ரா கிராமத்தில், 3 மாத கர்ப்பிணிப் பெண் அவரது கணவனால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்குப் பிறகு சடலத்தை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்று, விபத்து என நாடகமாடிய கணவனைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அதாவது  ஹீராபாய் (23) என்ற பெண்,  பிரதீப் அகரியா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஒன்றரை வயதான இரட்டைக் குழந்தைகள் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஹீராபாய் 4-ஆவது முறையாக 3 மாத கர்ப்பமாக இருந்தார். கடந்த மே 14 அன்று, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், பிரதீப் அகரியா தனது மனைவி ஹீராபாயை மரக்கட்டையால் மரண அடி அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி இறந்ததைத் தொடர்ந்து, கொலையை மறைக்கத் திட்டமிட்ட பிரதீப், ஹீராபாயின் உடலைத் தனது மோட்டார் சைக்கிளின் பின்புறம் கட்டி இழுத்துக்கொண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்களிடம், தன் மனைவிக்குச் சாலை விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிசெய்தனர். சந்தேகம் அடைவதை உணர்ந்த பிரதீப், உடனடியாக மருத்துவமனையில் இருந்து தப்பியோடிவிட்டார்.

மே 15 அன்று மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் சந்து பாக் தலைமையிலான குழுவினர் ஹீராபாயின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தனர். அப்போது வெளிவந்த உண்மைகள் மருத்துவர்களின் ரத்தத்தையே உறைய வைப்பதாக இருந்தது. பலத்த அடி காரணமாக பெண்ணின் மண்டை ஓட்டு எலும்பு சுக்குநூறாக உடைந்து போயிருந்தது. அவரது ரகசிய உறுப்பில் சுமார் 27 சென்டிமீட்டர் நீளமுள்ள கூர்மையான இரும்பு அரம் (Iron File) மிகக் கொடூரமாக உள்ளே செலுத்தப்பட்டிருந்தது.

அந்த இரும்பு அரத்தை உடலுக்குள் திணிப்பதற்காக, அந்தப் பெண்ணின் வயிறு மற்றும் தொடைகளில் கணவன் கால்களால் எட்டி உதைத்துள்ளான். இதனால் கருவில் இருந்த 3 மாத சிசுவும் உள்ளேயே மடிந்துள்ளது. பெண்ணின் உடல் முழுவதும் மொத்தம் 18 இடங்களில் மிகக் கடுமையான காயங்கள் இருந்தன.

பிரதீப் தனது மனைவியை மிருகத்தனமாகத் தாக்கியபோது, அவரது நான்கு குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர். “எங்கள் அம்மாவைக் காப்பாற்றுங்கள்” என்று குழந்தைகள் வீதிக்கு வந்து அலறியும், அக்கம் பக்கத்து கிராம மக்கள் யாரும் உதவிக்கு வரவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்பின், தந்தை அம்மாவின் உடலை பைக்கில் கட்டி இழுத்துச் சென்றபோது, குழந்தைகள் அங்கிருந்தவர்களிடம் உண்மையைச் சொல்லியுள்ளனர். இதன் மூலமே பெண்ணின் பெற்றோருக்குத் தகவல் கிடைத்து அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

பிரதீப் அகரியா ஏற்கனவே தனது மனைவியைக் கோடாரியால் வெட்டிப் படுகாயப்படுத்தியவர் என்பதும், அவர் மீது கிராமத்தில் பல புகார்கள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சர்குஜா போலீஸார், தலைமறைவாக உள்ள சைக்கோ கணவன் பிரதீப்பைத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.