இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, வெறும் 7 நிமிடங்களில் செலுத்தக்கூடிய புதிய நோயெதிர்ப்பு சிகிச்சை  ஊசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெய்சிங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நுரையீரல் புற்றுநோய் நோயாளிக்கு இந்த அதிநவீன சிகிச்சை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் அவரது மூளை, கல்லீரல் மற்றும் எலும்புகளுக்கு பரவியிருந்த நிலையில், கீமோதெரபியின் பக்கவிளைவுகளுக்கு பயந்த அவருக்கு இந்த புதிய ஊசி மருந்து ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பிரபல உலகளாவிய மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘ரோச்’ (Roche), இந்த நோயெதிர்ப்பு சிகிச்சை மருந்தை ‘டெசென்ட்ரிக்’ (Tecentric) என்ற பிராண்ட் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தோலின் கீழ் செலுத்தப்படும் ஒரு தடுப்பூசி போன்ற அமைப்பாகும்.

இதுகுறித்து மேதாந்தா மருத்துவமனையின் மருத்துவ ஆன்காலஜி துறைத் தலைவர் டாக்டர் சஜ்ஜன் ராஜ்புரோஹித் கூறுகையில், ஜெய்சிங்கின் உடலில் PD-L1 புரதத்தின் அளவு 75 சதவீதம் வரை மிக அதிகமாக இருந்தது. அதாவது, புற்றுநோய் செல்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திடம் இருந்து தங்களை மறைத்துக் கொள்ள இந்த புரதத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்துகின்றன என்று அர்த்தம். இதனால் அவர் இந்த சிகிச்சைக்கு மிகவும் தகுதியானவராக மாறினார்.

இதுவரை நரம்பு வழியாக குளுக்கோஸ் போல பல மணி நேரம் செலுத்தப்பட்ட இந்த மருந்து, இப்போது தோலின் கீழ் போடும் எளிய ஊசியாக மாற்றப்பட்டுள்ளது” என்றார். இந்தியாவில் ஆண்டுதோறும் கண்டறியப்படும் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளில் பெரும்பாலானவை ‘நாண்-ஸ்மால் செல்’ (Non-small cell lung cancer) வகையைச் சேர்ந்தவை. அவர்களுக்கு இது பெரிதும் உதவும்.

இந்த சிகிச்சை அனைத்து புற்றுநோய் நோயாளிகளுக்கும் கிடையாது. புற்றுநோய் செல்களில் PD-அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே இது வேலை செய்யும். இந்த வகை நுரையீரல் புற்றுநோயாளிகளில் பாதி பேர் இச்சிகிச்சைக்கு தகுதியானவர்கள் ஆவர். உலகளாவிய ஆய்வுகளின்படி, 5-ல் 4 நோயாளிகள் நரம்பு வழி சிகிச்சையை விட இந்த 7 நிமிட ஊசி முறையையே அதிகம் விரும்புகின்றனர்.

இந்த அதிநவீன மருந்து மிகவும் விலை உயர்ந்ததாகும். அதன்படி  ஒரு டோஸின் விலை: சுமார் ₹3,70,000 (3 லட்சம்த்து 70 ஆயிரம் ரூபாய்).  ஒரு நோயாளிக்கு பொதுவாக 6 டோஸ்கள் வரை தேவைப்படும். பழைய நரம்பு வழி மருந்தை விட, இந்த புதிய தோல் வழி ஊசி மருந்தின் விலை ₹25,000 முதல் ₹30,000 வரை குறைவாக உள்ளது. இம்மாபெரும் செலவைக் குறைக்க, இந்த மருந்து இப்போது ‘மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின்’ (CGHS) கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், தயாரிப்பு நிறுவனம் நோயாளிகளுக்கு உதவ ‘புளூ ட்ரீ’ (Blue Tree) என்ற உதவித் திட்டத்தையும் நடத்தி வருகிறது.

புற்றுநோய் செல்கள் தங்களின் மேற்பரப்பில் ‘PD-L1’ என்ற புரதத்தைக் காட்டி, உடலின் பாதுகாப்புப் படைகளான ‘டி-செல்களை’ (T-Cells) ஏமாற்றி தப்பித்து விடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் புற்றுநோய் செல்களை அழிக்க முடிவதில்லை.
‘அடெசோலிசுமேப்’ மருந்தை ஊசி மூலம் செலுத்தும்போது, அது அந்த ஏமாற்றுப் புரதத்தை (PD-L1) போய்ப் பிணைத்து, அதன் சிக்னலைத் துண்டிக்கிறது. இதனால் ஏமாற்றத்தில் இருந்து விடுபடும் உடலின் சொந்த ‘டி-செல்கள்’ மீண்டும் சுறுசுறுப்பாகி, புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அவற்றை வேட்டையாடி அழிக்கத் தொடங்குகின்றன. சுருக்கமாகச் சொன்னால், புற்றுநோய் செல்கள் போட்டிருந்த முகமூடியை இந்த ஊசி கழற்றி விடுகிறது; உடலின் சொந்த நோய் எதிர்ப்பு சக்தியே புற்றுநோயைக் குணப்படுத்துகிறது.