கர்நாடக மாநிலத்தில் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் லட்சுமண். இவரது மனைவி சிவலீலா. இந்த தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், சிவலீலா குண்டாக இருப்பதால் அவருக்குக் குழந்தை பிறக்காது என்று கூறி லட்சுமண் அவரைத் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் கடுமையான சண்டை வெடித்துள்ளது. இதனால் மனமுடைந்த சிவலீலா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரெனத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவலீலாவின் மரணம் குறித்துத் தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது சிவலீலாவின் பெற்றோர் போலீசாரிடம் கண்ணீருடன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதில், தங்களது மகள் குண்டாக இருப்பதாகக் கூறி அவளுக்குக் குழந்தை பிறக்காது என லட்சுமண் தினமும் மதுபோதையில் சண்டை போட்டுச் சித்ரவதை செய்ததாகவும்.

மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தியதால் தான் தங்கள் மகள் விபரீத முடிவை எடுத்துள்ளார் என்றும் தெரிவித்தனர். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கணவர் லட்சுமணனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.