இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டீக்கடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை அனைத்து இடங்களிலும் யு.பி.ஐ.  மூலம் பணம் செலுத்துவது மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இருப்பினும், சில சமயங்களில் மொபைல் நெட்வொர்க் பிரச்சனை அல்லது மெதுவான இணைய வேகம் காரணமாகப் பணப் பரிவர்த்தனை தோல்வியடைவது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இணைய இணைப்பு   இல்லாமலேயே யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்ய இந்திய தேசிய செலுத்துதல் கழகம்  திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வசதி ‘என்.எஃப்.சி’   எனப்படும் குறுகிய தூர ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, வழக்கம்போல கியூ.ஆர்   கோடுகளை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை.

பணத்தைப் பெறுபவரின் கடையிலோ அல்லது வணிகரிடமோ உள்ள என்.எஃப்.சி வசதி கொண்ட கருவியின் அருகில் நமது போனை சற்று அருகில் கொண்டு சென்றாலே   போதும், இணைய சேவை இல்லாமலேயே பணம் உடனடியாகப் பரிமாற்றம் செய்யப்படும்.
ஏற்கனவே ‘யு.பி.ஐ. லைட்’  மூலம் குறைந்த தொகையிலான ஆஃப்லைன் பரிவர்த்தனைகள் நடைமுறையில் இருந்தாலும், இந்த புதிய என்.எஃப்.சி தொழில்நுட்பம் அதனை விடவும் வேகமாகவும், மிகவும் எளிமையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் நிலையங்கள், அடித்தளத்தில் உள்ள வர்த்தக மையங்கள் மற்றும் நெட்வொர்க் சிக்னல் குறைவாக இருக்கும் தொலைதூரக் கிராமப்புறப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கி   மற்றும் இந்திய தேசிய செலுத்துதல் கழகம்  ஆகியவை இந்த ஆஃப்லைன் பரிவர்த்தனை முறையை சோதனை அடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றன.

விரைவில் இந்த வசதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாற்றம் அமலுக்கு வரும் பட்சத்தில், இந்தியாவில் ரொக்கமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனை அடுத்த கட்டத்திற்குச் செல்வதோடு, இணைய சேவை தடங்கலால் ஏற்படும் அசௌகரியங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.