உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், ஒருதலைக் காதலால் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.

டெல்லியில் தங்கி வேலை செய்து வந்த அந்தச் சிறுமி, தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்தார். கடந்த மே 11ஆம் தேதி இரவு, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சிறுமி தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த அதுல் என்ற இளைஞர் அவரை வழிமறித்துக் கடத்திச் சென்றுள்ளார்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சிறுமியை இழுத்துச் சென்ற அந்த நபர், ஒரு மரத்தில் கட்டி வைத்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளார்.

அதற்கு அந்தச் சிறுமி, “உறவின் முறைப்படி நீ எனக்கு அண்ணன் வேண்டும், உன்னை எப்படித் திருமணம் செய்ய முடியும்?” எனக் கேட்டு மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அதுல், சிறுமியைச் சரமாரியாகத் தாக்கியதுடன், அவரது அந்தரங்க உறுப்புகளைத் தனது பற்களால் கடித்துக் குதறியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த சிறுமியை அங்கேயே போட்டுவிட்டு அந்த நபர் தப்பியோடியுள்ளார். சுயநினைவு திரும்பிய பின் வீட்டிற்கு வந்து சிறுமி நடந்ததைக் கூறவே, அவரது தாய் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், போலீசார் ஆரம்பத்தில் புகாரைப் பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டியதாகவும், பின்னர் வெறும் சாதாரண அடிதடி வழக்காக மட்டும் பதிவு செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்

5 நாட்கள் கடந்தும் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.