டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகாவின் மனைவி மற்றும் குழந்தையை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. 165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, கடைசி ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 100 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும் வெற்றி கைநழுவியது.

இந்தத் தோல்வியால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கலானது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர், கேப்டன் சல்மான் அலி ஆகாவின் மனைவி சப்பா மன்சர் மற்றும் அவர்களது கைக்குழந்தை சாலா ஆகியோரை சமூக வலைதளங்களில் தகாத வார்த்தைகளால் வசைபாடினர்.

இதற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள சப்பா மன்சர், “என்னை அல்லது எனது அப்பாவி மகனை திட்டுவதால் நீங்கள் உலகக்கோப்பையை வென்றுவிடப் போவதில்லை பாகிஸ்தான் ரசிகர்களே!” என்று தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார். வழக்கறிஞரான சப்பா, லண்டனில் சட்டம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் ஒரு புள்ளி (மழையால் ஒரு போட்டி ரத்து) மற்றும் -0.461 நெட் ரன் ரேட்டுடன் இக்கட்டான நிலையில் உள்ளது.

தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியைப் பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். நியூசிலாந்து அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் (இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக) தோல்வியடைய வேண்டும்.

ஒருவேளை நியூசிலாந்து ஒரு போட்டியில் வென்றால், ரன் ரேட் அடிப்படையில் முடிவு செய்யப்படும். நியூசிலாந்து இரண்டு போட்டிகளிலும் வென்றால் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக வெளியேறும்.

வெற்றி தோல்வியைக் கடந்து, வீரர்களின் குடும்பத்தினரை டார்கெட் செய்யும் பாகிஸ்தான் ரசிகர்களின் செயல் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.