பிசிசிஐ நடத்தும் 2025-26 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடகாவுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் அணி 450 ரன்களுக்கு மேல் குவித்து தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் இடையே வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மைதானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஹூப்ளியில் உள்ள டி.ஆர்.பேந்த்ரே மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதி ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜம்மு-காஷ்மீர் அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 139 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 464 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சுபம் புண்டீர் அபாரமாக விளையாடி 121 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் யாவர் ஹசன் (88), கன்ஹையா வதாவன் (70) மற்றும் அப்துல் சமத் (61) ஆகியோரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் 101-வது ஓவரின் போது ஜம்மு-காஷ்மீர் கேப்டன் பரஸ் டோக்ரா மற்றும் கர்நாடக பீல்டர் கே.வி. அனீஷ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அனீஷ் தொடர்ந்து வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியதால் ஆத்திரமடைந்த டோக்ரா, அவரைத் தனது தலையால் முட்டினார். உடனடியாக தலையிட்ட கர்நாடக கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் டோக்ரா தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார்.

முன்னதாக, முதல் நாள் ஆட்டத்தில் வைஷாக் விஜயகுமார் வீசிய பவுன்சர் பந்து கையில் பட்டதால், டோக்ரா 9 ரன்களுடன் ‘ரிட்டையர் ஹர்ட்’ ஆகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் 65 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

அதேபோல், கன்ஹையா வதாவன் ரன் ஓடும்போது பந்துவீச்சாளர் வைஷாக் விஜயகுமார் மீது மோதியதால் இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி இறுதிப்போட்டியில் விளையாடும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது‌