டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அணியின் தேர்வு முறை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, நல்ல ஃபார்மில் இருந்த அக்சர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை ஆடும் லெவனில் சேர்த்த கௌதம் கம்பீரின் முடிவை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கடுமையாகச் சாடியுள்ளார். தென்னாப்பிரிக்கா போன்ற பலமான அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் அக்சரை நீக்கியது இந்திய அணிக்குத் தேவையில்லாத நெருக்கடியை உருவாக்கிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​இது குறித்து கிண்டலாகப் பேசிய மஞ்ரேக்கர், பழைய காலங்களில் உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும் ‘கைலாஷ் ஜீவன்’ என்ற ஒரு மருந்தையே தீர்வாகப் பயன்படுத்துவார்கள், அதுபோல இந்திய அணியில் பேட்டிங் அல்லது பவுலிங் என எதில் பிரச்சனை என்றாலும் கௌதம் கம்பீர் உடனடியாக வாஷிங்டன் சுந்தரைத்தான் தீர்வாகப் பார்ப்பதாக விமர்சித்துள்ளார். எந்தச் சூழலுக்கும் சுந்தரைப் பயன்படுத்துவது சரியான வியூகம் அல்ல என்றும், வீரர்களின் தற்போதைய ஃபார்மை வைத்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.