மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் நெஞ்சை உலுக்கும் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. புனேவைச் சேர்ந்த விராட் கௌதம் என்ற நபர், கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாப்பூர் புய்கடி காட் பகுதியில் நடந்த ஒரு பேருந்து விபத்தில் தனது மனைவி நீலு, மகள் ரித்திமா மற்றும் மகன் சர்தக் ஆகிய மூவரையும் தன் கண் முன்னாலேயே இழந்தார்.

இந்த பயங்கர விபத்தில் அவர் மட்டும் உயிர் பிழைத்த போதிலும், தனது முழு குடும்பத்தையும் இழந்த துயரத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடுமையான மன உளைச்சலிலும் தீவிர மன அழுத்தத்திலும் இருந்த அவர், தனது குடும்பத்தின் நினைவுகளில் இருந்தே மீள முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இதனால் ஒவ்வொரு வாரமும் விபத்து நடந்த அந்த இடத்திற்குச் செல்லும் விராட் கௌதம், அங்குள்ள இரும்புத் தடுப்பில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்காக மூன்று மாலைகளை அணிவித்து, மணிக்கணக்கில் அமர்ந்து அழுது புலம்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் “நீங்கள் இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்? என் உலகம் அன்றே முடிந்துவிட்டது” என்று சமூக ஊடகத்தில் உருக்கமாக ஒரு பதிவை எழுதிவிட்டு, தனது குடும்பத்தினரின் உயிர் பிரிந்த அதே விபத்து நடந்த இடத்திற்குச் சென்று விஷம் குடித்து அவரும் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.