மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில், 64 வயது முதியவர் ஒருவரை ஆசை வலையில் வீழ்த்தி, அவரிடமிருந்து சுமார் 70 லட்சம் ரூபாயை ஒரு தம்பதியினர் பறித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட முதியவர் அமராவதியில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது அங்கிருந்த கடை உரிமையாளரான கணவன் மற்றும் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் முதியவரின் நம்பிக்கையைப் பெற, அந்த பெண்ணின் கணவர் 10,000 ரூபாய் கடன் வாங்கி முறையாகத் திருப்பிக் கொடுத்துள்ளார். அதன் பிறகு, கணவர் இல்லாத நேரத்தில் அந்தப் பெண் முதியவரிடம் நைசாகப் பேசித் பழகியுள்ளார்.

என் கணவர் என்னைச் சரியாகக் கவனிப்பதில்லை, நீங்கள் இன்னும் இளமையாக இருக்கிறீர்கள் என ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண் முதியவரைத் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். 2020 மார்ச் மாதம் இருவரும் தனிமையில் இருந்தபோது, அதனைப் பெண் மற்றும் அவரது கணவர் திட்டமிட்டு ரகசிய கேமரா  மூலம் படம் பிடித்துள்ளனர்.

சிறிது காலம் கழித்து முதியவர் விலக முயன்றபோது, அந்த பெண்ணின் கணவர் தனது உண்மையான முகத்தைக் காட்டியுள்ளார். என்னிடம் உங்கள் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் போன் கால் ரெக்கார்டுகள் உள்ளன. உங்கள் குடும்பத்தாருக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார். தனது கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள முதியவர் பணத்தைக் கொடுக்கத் தொடங்கினார்.

கடந்த 4 ஆண்டுகளில் (2020 – 2024): பல்வேறு தவணைகளில் செக் மூலமாக லட்சக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 லட்சம் ரூபாய் ரொக்கமாக வாங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 70 லட்சம் ரூபாயை அந்தத் தம்பதி விவசாயியிடமிருந்து உறிஞ்சியுள்ளனர். தொடர் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான முதியவர், இறுதியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதியவரின் புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள அந்தத் தம்பதியினரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.