தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்ற இந்தியப் பயணி ஒருவருக்கு நேர்ந்த இனவெறி (Racism) பாகுபாடு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் @semicolonsandsuitcases வெளியிட்ட இந்த வீடியோவில், உணவகம் ஒன்றில் பில் தொடர்பாக ஏற்பட்ட சிறு குழப்பத்தின் போது, அவர் இந்தியர் என்று தெரிந்ததும் அங்கிருந்த பெண்மணி ஒட்டுமொத்த இந்தியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியது பதிவாகியுள்ளது.

“இந்தியர்கள் என்றாலே பணம் கொடுக்க மாட்டார்கள்” என்கிற பொதுப்படையான குற்றச்சாட்டை முன்வைத்து அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நிலைமையைக் கையாள அந்தப் பயணி சுற்றுலாப் போலீசாரை அழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். ​இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அந்தப் பயணி, தான் காஷ்மீரைச் சேர்ந்தவர் என்றும், இதுபோன்ற பொதுப்படையான இனவெறி கருத்துகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் தெரிவித்துள்ளார்.

“நான் உலகைச் சுற்றிப் பார்க்கும் ஒரு பயணி, மக்களின் கலாச்சாரத்தோடு இணையவே விரும்புகிறேன்; ஆனால் நாம் எதையும் தூண்டாமலேயே நம் நாடு மற்றும் இனத்தின் அடிப்படையில் இழிவுபடுத்தப்படுவது வருத்தமளிக்கிறது” என அவர் ஆதங்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், ஒரு தரப்பினர் இது போன்ற சம்பவங்கள் சுற்றுலாத் தலங்களில் சாதாரணமாகிவிட்டதோ என்கிற அச்சத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.