பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகளும் நடிகையுமான சுஹானா கான், மகாராஷ்டிராவின் அலிபாக் பகுதியில் விவசாய நிலம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

தல் என்ற கிராமத்தில், விவசாயிகளுக்கே ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை, தேவையான சட்ட அனுமதிகள் இல்லாமல் சுஹானா கான் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலம் 13 கோடி ரூபாய் மதிப்புடையது என்றும், அதற்காக 77 லட்சம் ரூபாய் ஸ்டாம்ப் டூட்டி செலுத்தப்பட்டதாகவும், 2023 மே 30ஆம் தேதி நில பரிவர்த்தனை நடந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சுஹானா கான் கடந்த ஆண்டு 22 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு நிலங்களை ‘தேஜா வு ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட்  என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்துள்ளார். இந்த நிறுவனத்தில் கௌரி கானின் தாய் மற்றும் மைத்துனி இணைந்துள்ள நிலையில், சுஹானா தனது ஆவணங்களில் தன்னை விவசாயியாக காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, அலிபாக் தாசில்தாரிடம் இருந்து முழுமையான விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாக மாவட்ட துணை ஆட்சியர் சந்தேஷ் ஷிக்ரே தெரிவித்தார். தற்போது, இந்த விவகாரம் அதிகாரப்பூர்வ விசாரணையின் கீழ் உள்ள நிலையில், சுஹானாவின் எதிர்கால அரசியல், சட்ட நிலைமை குறித்து பலர் ஆர்வமுடன் கவனம் செலுத்தி வருகின்றனர்.