தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் சலீம் குமார் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் தற்போது மரணமடைந்தார். கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘ஆதாமின்றெ மகன் அபூ’ திரைப்படத்தில் நெஞ்சை உருக்கும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்ற சலீம் குமார், கடந்த சில வருடங்களாகவே தொடர் உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவை தாண்டி தீவிர அரசியல் ஆதரவாளரான சலீம் குமார், கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (UDF) ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, வட பரவூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தற்போதைய முதல்வர் வி.டி.சதீசனுக்காக அவர் மேற்கொண்ட பிரச்சாரம் பெரும் அரசியல் புயலையே கிளப்பியது. அப்போதைய முதல்வர் பினராயி விஜயனின் ஆட்சி கால வளர்ச்சிப் பணிகளை சலீம் குமார் கடுமையாக விமர்சித்து பேசியது, சிபிஐ(எம்) தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பும் அவரது பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. எனினும், தனது நலிவடைந்த உடல்நிலையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பிரச்சாரம் செய்த அவர், கடைசியாக வி.டி.சதீசன் முதல்வராக பொறுப்பேற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று மாஸாக பேசினார். கடந்த 2001 முதல் சதீசனுக்காக தொடர்ந்து களத்தில் நின்றவர் சலீம் குமார். மேலும் கிட்டதட்ட 300 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் சலீம் குமார் தற்போது மரணம் அடைந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.