தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச எல்லைகள் வழியாகப் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பது மத்திய அரசின் கடமை என்று தெரிவித்திருந்தார்.
சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முதலமைச்சரின் இந்தக் கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாகச் சாடினார்.
தமிழகக் காவல்துறை மற்றும் உளவுப்பிரிவு முதலமைச்சரின் நேரடித் தார்மீகப் பொறுப்பில் இருக்கும்போது, தன் தவறை மறைக்க மத்திய அரசு மீது அவர் பழி போடுவதாக அண்ணாமலை விமர்சித்தார்.
“என்னால் காவல்துறையைச் சரியாக நிர்வாகம் செய்ய முடியவில்லை என்று முதலமைச்சர் ஒத்துக்கொண்டால், மத்திய அரசு அந்தப் பொறுப்பை ஏற்றுப் பார்த்துக்கொள்ளும்” என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் போதைப் பொருட்களைத் தடுப்பதில் மத்திய அரசு தன் பணியைச் சிறப்பாகச் செய்வதாகவும், உள்ளூர் விற்பனையைத் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
