ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, துபாய் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பிரிட்டிஷ் நபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துபாயின் ‘டவுன் ஸ்கொயர்’ பகுதியில் உள்ள ‘வர்தா’ (Warda) என்ற சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் வசித்து வரும் பிரிட்டிஷ் நபர் ஒருவர், இந்தத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது வீட்டின் வரவேற்பு அறையில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் மற்றும் சேதமடைந்த தளபாடங்கள் சிதறிக் கிடப்பதைக் காட்டியுள்ளார்.

ட்ரோன் மோதிய அதிர்ச்சியில் இருந்தபோதும், அந்த நபர் மிகவும் நிதானமாகப் பேசியது இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது. வீடியோவில் அவர் பேசியதாவது, “நிச்சயமாக இது நகைச்சுவை அல்ல. எங்கள் வீட்டின் மீது ட்ரோன் மோதியுள்ளது. அது வரும் சத்தம் எங்களுக்குக் கேட்டது. வீடு முழுவதும் பெட்ரோல் வாடை வீசுகிறது. நான் இன்னும் எனது ஒரு கோப்பை தேநீரைக் கூட குடித்து முடிக்கவில்லை. நாங்கள் கிளம்புகிறோம் என்றார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “சர்வதேச மோதலின் போது கூட ஒரு பிரிட்டிஷ் நபர் தனது தேநீர் நேரத்தைப் பற்றி கவலைப்படுவது ஆச்சரியமாக உள்ளது” எனப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.