குஜராத் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கையாளுதலில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. 2022 அக்டோபர் முதல் 2023 ஜூலை வரை பறிமுதல் செய்யப்பட்ட 6,510 கிலோ போதைப்பொருளில், சுமார் 2,332 கிலோ பொருட்கள் மாயமாகியுள்ளன. இது மொத்த அளவில் 35 சதவீதம் ஆகும்.

இந்த காணாமல் போன பொருட்களுக்கு விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம், போதைப்பொருட்களை எலிகள் தின்றுவிட்டதாகவும், ஈரப்பதம் காய்ந்ததால் அதன் எடை குறைந்துவிட்டதாகவும், சில பொருட்கள் திருடப்பட்டதாகவும் வினோதமான காரணங்களைக் கூறியுள்ளது. இருப்பினும், இந்த விளக்கங்களை ஏற்க மறுத்த சிஏஜி அமைப்பு, இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் மாயமானதை வெறும் எலிகள் மற்றும் ஈரப்பதத்தை காரணம் காட்டி மறைக்க முடியாது என்று கண்டித்துள்ளது.

முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததும், அதிகாரிகளின் மெத்தனமுமே இதற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அறிக்கை, காணாமல் போன போதைப்பொருட்கள் மீண்டும் சட்டவிரோத விற்பனைக்குச் சென்றிருக்கலாம் என்ற அச்சத்தையும் எழுப்பியுள்ளது.

போதைப்பொருள் பாதுகாப்பு அறைகளை நவீனப்படுத்தவும், பறிமுதல் செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் கண்காணிப்பு வழங்கவும் அரசுக்கு சிஏஜி அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.