சுவிட்சர்லாந்தின் ஐ.கு. ஏர் நிறுவனம் 2025-ஆம் ஆண்டிற்கான உலக காற்றுத்தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக முதலிடத்தைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து வங்கதேசம் இரண்டாம் இடத்தையும், தஜிகிஸ்தான் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வரும் வாகனப் புகை, தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் பயிர்க் கழிவுகளை எரித்தல் போன்ற காரணங்களால் காற்று மாசுபாடு அபாயகரமான அளவை எட்டியுள்ளதாக அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த உலகளாவிய பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் லோனி நகரம் உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஆய்வு செய்யப்பட்ட 143 நாடுகளில், வெறும் 13 நாடுகள் மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தின் காற்றுத் தர வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுமானப் புழுதி மற்றும் தொழிற்சாலைப் புகையால் தெற்காசிய நாடுகளின் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
