அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்க ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் புதிய ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மனிதர்கள் இல்லாத ‘ட்ரோன் ஸ்பீட் போட்’களை (Drone Speedboats) அமெரிக்கா முதன்முறையாகப் போர்க்களத்தில் இறக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கண்ணிவெடிகளைத் தூவி கடல் வழியை ஆபத்தானதாக மாற்றியுள்ள நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்க இந்த அதிநவீன ட்ரோன் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ட்ரோன் படகுகள் கடலில் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து எதிரிகளின் நடமாட்டத்தைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கொண்டவை. வெறும் கண்காணிப்பு மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் எதிரிக் கப்பல்கள் மீது மோதி வெடிக்கும் ‘தற்கொலைப்படை’ தாக்குதலையும் இவை நடத்தும் எனத் தெரிகிறது.

ஏற்கனவே அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘அப்ரகாம் லிங்கன்’ மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது ட்ரம்ப் எடுத்துள்ள இந்த ‘ட்ரோன்’ அட்டாக் முடிவு ஈரானுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கடல் வழி வர்த்தகத்தைப் பாதுகாக்கவும், ஈரானின் பிடியை உடைக்கவும் அமெரிக்கா எடுத்துள்ள இந்த விஸ்வரூபம் உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது.