சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக (MTC) அரசுப் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் பெயர் பலகையில், ‘தக்காளி வெற்றி கழகம்’ என்ற வாசகம் ஓடியது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சை மற்றும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சென்னை நகருக்குள் இயங்கிய அரசுப் பேருந்து ஒன்றின் முகப்பு டிஜிட்டல் பலகையில், வழக்கமாக ஓடும் வழித்தடப் பெயருக்குப் பதிலாக “தக்காளி வெற்றி கழகம்” என சர்ச்சைக்குரிய வகையில் மாற்றப்பட்டு ஓடியுள்ளது. இதைப் பார்த்த பயணிகள் மற்றும் பாதசாரிகள் சிலர் அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல வைரலானது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக (MTC) நிர்வாகம் சார்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில் உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சில மர்ம நபர்கள் வேண்டுமென்றே இத்தகைய குறும்புத்தனமான சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இது போக்குவரத்துக் கழகத்தின் கவனத்திற்கு வந்தவுடனேயே பெயர் பலகை உடனடியாகச் சரி செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்பு மீறல்கள் நடைபெறாத வண்ணம் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் MTC நிர்வாகம் கூறியுள்ளது. டிஜிட்டல் பலகைகளின் கடவுச்சொல் (Password) மற்றும் அமைப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், பேருந்துகளை இயக்கத் தொடங்குவதற்கு முன் பெயர் பலகையைச் சரிபார்க்குமாறும் ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்தின் டிஜிட்டல் போர்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய இந்த சம்பவம், தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
