மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஏழை வியாபாரி முகேஷ் குமார் என்பவருக்கு வாயில் ஏற்பட்ட சாதாரணக் கொப்புளத்துக்காக நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் மருத்துவரின் விபரீதமான கவனக்குறைவால் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மாறாக தாடி வளரும் முகத் தோலைப் பொருத்தியுள்ளதால், கடந்த 27 மாதங்களாக அவரது வாயின் உள்ளே தொடர்ந்து முடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால் ஒவ்வொரு முறையும் உணவை மென்று விழுங்குவதிலும், பேசுவதிலும் அவருக்குக் கடுமையான வேதனையும் அவஸ்தையும் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தவறான சிகிச்சையால் தனது வாழ்க்கை நரகம் போல் மாறிவிட்டதாகத் தெரிவிக்கும் முகேஷ் குமார், இதற்கு நீதி கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காவல் நிலையங்கள் மற்றும் எஸ்பி அலுவலகத்துக்கு செல்கிறார். ஆனால், சம்பந்தப்பட்ட மருத்துவர் புகழ்பெற்றவர் என்பதால் காவல்துறையினர் அவரது புகாரை முறையாக ஏற்காமல் வெறும் மனுக்களை மட்டும் பெற்றுக் கொண்டு திருப்பி அனுப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மும்பை டாட்டா மெம்கோரியல் மற்றும் போபால் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தும், லேசர் சிகிச்சை மட்டுமே ஒரே வழி என்றும் அது சாதாரண ஏழைக்குக் கட்ட முடியாத செலவு என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டதால் அவர் செய்வதறியாமல் தவித்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தனது மனுவுடன் சென்ற முகேஷுக்கு நீதி கிடைக்காதது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற தனியார் மருத்துவ முறைகேடுகள் மீதும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள் மீதும் கடுமையான கோபமும் அதிருப்தியும் வெளிப்பட்டு வருகிறது.
