உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் பார்ப்பவர்களையே கலங்க வைக்கும் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்றால் கடிக்கப்பட்ட சிறுவன், தற்போது நாய் போலவே குரைப்பதும், மற்றவர்களைக் கடிக்கப் பாய்வதுமாக விசித்திரமாக நடந்து கொள்கிறான். நாய் கடித்த உடனேயே முறையான சிகிச்சை எடுக்காததும், ரேபிஸ் தடுப்பூசியை (Rabies Vaccine) வெறும் இரண்டு டோஸ்கள் மட்டுமே போட்டுவிட்டு பாதியிலேயே நிறுத்தியதும்தான் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இப்போது அந்தச் சிறுவனின் உடலில் ரேபிஸ் வைரஸ் முழுமையாகப் பரவி, மூளையைப் பாதித்துள்ளதால் அவன் நாய் போலவே செயல்படத் தொடங்கியுள்ளான்.

​இந்தச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், “தடுப்பூசி கோர்ஸை முழுமையாக முடிக்காததே இந்த நிலைக்குக் காரணம். தற்போது வைரஸ் உச்சக்கட்டத்தை எட்டிவிட்டதால், சிறுவன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு” என்று கைவிரித்துவிட்டனர். தன் கண் முன்னாலேயே மகன் நாய் போலக் குரைப்பதைக் கண்டு பெற்றோர் கதறி அழுவது பார்ப்பவர் நெஞ்சை உருக்குகிறது. நாய் கடித்தால் சிறிய காயம் தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது என்பதற்கும், தடுப்பூசி மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கும் இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.