ஆந்திரப் பிரதேசத்தில் ரேபீஸ் (காண்டை நோய்) அறிகுறிகளுடன் ஒரு ஆண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகரம் மாவட்டம் கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த லிங்கன்ன நாயுடு என்பவரை, ஆகஸ்ட் 30 அன்று தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் அவர் அருகிலுள்ள சுகாதார மையத்தில் மூன்று டோஸ் ரேபீஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டார். இருப்பினும், சமீபத்தில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, ரேபீஸ் அறிகுறிகள் தெரியவந்தன. இதையடுத்து மருத்துவர்கள் அவரை விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர்.
ஆனால், விசாகப்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது லிங்கன்ன நாயுடு உயிரிழந்தார். தடுப்பூசிகள் பெற்றிருந்தபோதிலும் ரேபீஸால் இறந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கேரளாவிலும் சில மாதங்களுக்கு முன் மூன்று குழந்தைகள் தடுப்பூசி எடுத்தபிறகும் ரேபீஸால் உயிரிழந்தனர், இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டில் ரேபீஸ் இறப்புகள் அதிகரிப்பதால், தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
