அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில், தனது வளர்ப்பு நாயை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல முயன்ற பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ‘சர்வீஸ் டாக்’ (Service Dog) என்பதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அந்தப் பெண் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி, ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்திற்கு தனது ‘கோல்டன் டூடுல்’ ரக நாயுடன் அந்தப் பெண் வந்துள்ளார். ஜெட் புளூ (JetBlue) விமான நிறுவனத்திடம் தனது நாயையும் அழைத்துச் செல்ல அனுமதி கோரியபோது, முறையான ஆவணங்கள் இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தனது நாயின் கழுத்து வாரை  அங்கேயே விட்டுவிட்டு, நாயைத் தனியாகத் தவிக்கவிட்டுச் சென்றார்.

விமான நிலைய சிசிடிவி காட்சிகளில், அந்த நாய் வாலை ஆட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதும், அதன் உரிமையாளர் அதைப் பிரிந்து செல்வது புரியாமல் தவிப்பதும் பதிவாகியுள்ளது. அங்கிருந்த ஊழியர்கள் நாயை அரவணைத்து ஆறுதல்படுத்தினர். பின்னர், பாதுகாப்பு அதிகாரிகளால் அந்தப் பெண் தடுத்து நிறுத்தப்பட்டபோது, அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டார்.

விசாரணையின் போது, “நாயிடம் ஜிபிஎஸ் (GPS) கருவி உள்ளது, எனவே அது தானாக என்னிடம் வந்துவிடும் என்று நினைத்தேன்” என அந்தப் பெண் விசித்திரமான காரணத்தைக் கூறியுள்ளார். “தயவுசெய்து உங்கள் செல்லப்பிராணிகளை விமான நிலையத்திலோ அல்லது வேறு எங்குமோ இதுபோல அனாதையாக விட்டுச் செல்லாதீர்கள்” என காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

‘ஜெட் புளூ’ எனப் பெயரிடப்பட்ட அந்த நாயை மீட்க அதன் உரிமையாளர் 10 நாட்கள் வரை முன்வராததால், அது ஒரு தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது ஒரு தற்காலிக வளர்ப்பு இல்லத்தில் (Foster Care) பாதுகாப்பாக இருக்கும் அந்த நாய்க்கு, நிரந்தரமான மற்றும் அன்பு செலுத்தக்கூடிய ஒரு குடும்பத்தைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.