அரபிக்கடல் மற்றும் செங்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆடுகளை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நூற்றுக்கணக்கான ஆடுகள் தண்ணீரில் மூழ்கின.

ஏமன் நாட்டு கடற்கரை அருகே அரபு நாடுகளுக்கு ஆடுகளை ஏற்றுமதி செய்யும் சரக்குக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கப்பல் ஒருபுறமாக சரியத் தொடங்கியது. சில நொடிகளிலேயே நிலைதடுமாறிய அந்தக் கப்பல், ஆயிரக்கணக்கான ஆடுகளுடன் கடலில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

கப்பல் கவிழ்ந்தவுடன் அதில் இருந்த ஆடுகள் அனைத்தும் தண்ணீரில் விழுந்தன. சில ஆடுகள் நீந்தி உயிர் தப்ப முயன்றன, பல ஆடுகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தன.

இந்த விபத்தை நேரில் பார்த்த அருகிலிருந்த மீனவர்கள், உடனடியாகத் தங்கள் சிறிய படகுகளில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆடுகளை ஒவ்வொன்றாகத் தூக்கி தங்கள் படகுகளில் ஏற்றி மீட்டனர். மேலும், கப்பலில் இருந்த ஊழியர்களையும் மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ ‘X’ தளத்தில் @Ibn_Ahmad_01 என்ற கணக்கில் பகிரப்பட்டு, தற்போது வைரலாகி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவைப் பார்த்து, ஆடுகளைக் காப்பாற்றத் துரிதமாகச் செயல்பட்ட மீனவர்களின் மனிதாபிமானத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.