சமூக ஊடக ஜாம்பவானான மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் சிறுவர்கள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாகச் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு குறித்து உலகளவில் பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், இது குறித்து மனம் திறந்துள்ள அவர், வயது வரம்பைக் கடந்து சிறார்கள் உள்ளே நுழைவதைத் தடுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பட்டியலிட்டுள்ளார்.

தொழில்நுட்ப ரீதியாகப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், சிறுவர்கள் தங்களது வயதை மறைத்து அல்லது போலி கணக்குகள் மூலம் உள்ளே வருவதைத் முழுமையாகத் தடுப்பது எளிதான காரியம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறார்களின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதாகத் தெரிவித்தாலும், தொழில்நுட்ப உலகின் உச்சத்தில் இருக்கும் சக்கர்பெர்க்கே இது ஒரு கடினமான சவால் என்று கூறியிருப்பது, தங்கள் குழந்தைகளின் இணையப் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.