அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி. நகர மேயர் தேர்தலில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 31 வயதான ரினி சம்பத் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் பிறந்த இவர், தனது 7 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர், முதலில் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அங்கு அக்கட்சிக்கு அதிக செல்வாக்கு இருப்பதால், உட்கட்சித் தேர்தலில் வென்றுவிட்டால் மேயர் தேர்தலில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். தற்போது ரினி சம்பத் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக 15,000 டாலர்களுக்கும் மேலாக நிதியைத் திரட்டி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

உட்கட்சித் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி வேட்பாளரை அவர் நேரடியாக எதிர்த்துப் போட்டியிடுவார்.

ஒரு தமிழ்ப் பெண் அமெரிக்காவின் முக்கிய நகரமான வாஷிங்டன் டி.சி.-யின் மேயர் பதவிக்குப் போட்டியிடுவது இந்தியர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.