பிரிட்டனின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாக எழுந்த புகாரில், அந்நாட்டின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ நேற்று கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது சகோதரரும் பிரிட்டன் மன்னருமான சார்லஸ் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆண்ட்ரூ அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் செய்திகள் தனக்கு மிகுந்த கவலையளிப்பதாக மன்னர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், தகுந்த அதிகாரிகள் மேற்கொள்ளும் முறையான விசாரணைக்குத் தனது முழுமையான ஒத்துழைப்பு உண்டு என்றும் மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
விசாரணை முடியும் வரை இது குறித்துத் தாம் மேலதிகக் கருத்துகளைத் தெரிவிக்கப் போவதில்லை எனக் கூறியுள்ள அவர், தற்சமயம் தனது குடும்பத்தினர் மக்களின் நலனுக்காகவும், சேவைக்காகவும் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
