மலையாள திரையுலகில் தனது நகைச்சுவையான பேச்சினாலும் வெளிப்படையான கருத்துகளினாலும் எப்போதும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகர் தியான் ஸ்ரீனிவாசன். சமீபத்தில் நடைபெற்ற ஒரு விளம்பரத் தூதுவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து மேடையில் கலகலப்பாகப் பேசி அரங்கத்தையே சிரிப்பலையில் மூழ்கடித்துள்ளார். விஜய்யின் அரசியல் வெற்றியைப் பார்த்த பிறகு, தனக்கும் அதே போன்ற ஒரு ஆசை வந்துவிட்டதாக அவர் ஜாலியாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரங்கில் தியான் ஸ்ரீனிவாசன் பேசுகையில், “சமீபகாலமாக நான் திரைப்படங்களில் கவனம் செலுத்துவதை விட, மேடை நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில்தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். அப்படி ஆஸ்திரேலியாவில் நான் ஒரு மேடை நிகழ்ச்சியில் இருந்தபோதுதான், நடிகர் விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றார். அதைப் பார்த்த உடனே, அடுத்த 15 ஆண்டுகளுக்குள் நானும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்” எனக் கூறி அதிரடி கிளப்பினார்.

இதைக் கேட்டு மேடையிலிருந்த அவரது நண்பரும் நடிகருமான அஜு வர்கீஸ் தனக்கு போன் செய்து கொடுத்த அட்வைஸ் குறித்தும் தியான் கிண்டலாகப் பகிர்ந்து கொண்டார். “நான் சி.எம் ஆகப்போகிறேன் என்று சொன்னதும் அஜு வர்கீஸ் எனக்கு போன் செய்தார். ‘தம்பி! எடுத்தவுடனே சி.எம் ஆகணும்னு ஆசைப்படாதே. முதல்ல நம்ம ‘அம்மா’ (மலையாள நடிகர் சங்கம் – AMMA) அமைப்போட தலைவராகுறதுக்கு வழி பாரு. அதுக்கப்புறம் நிறைய தொண்டு வேலைகளை செஞ்சு மக்களைக் கவர்ந்து, மெல்ல மெல்ல சி.எம் ஆகலாம்’ என்று அஜு எனக்கு அட்வைஸ் தந்தார்” என தியான் ஸ்ரீனிவாசன் கூற, அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவின் போது, நடிகை த்ரிஷா பட்டுப்புடவை கட்டி முன் வரிசையில் அமர்ந்திருந்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியதை தியான் ஸ்ரீனிவாசன் மேடையில் சுட்டிக்காட்டினார். அங்கிருந்த நடிகை நவியா நாயரை வம்புக்கு இழுத்த தியான், “நவியாவுக்கு திருமணமாகி ஒரு மகன் இருந்தாலும், நான் சி.எம் ஆகப் பதவியேற்கும் நாளில், நவியா நாயர் முன் வரிசையில் பட்டுப்புடவை அணிந்து, கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் அமர்ந்திருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்.

இதற்கு சற்றும் சளைக்காமல் பதிலளித்த நவியா நாயர், “கவலைப்படாதே தியான், நீ ஆசைப்பட்டபடியே நீ சி.எம் ஆகும்போது, பச்சை பார்டர் போட்ட வெள்ளை புடவை கட்டி, வைர நெக்லஸ் போட்டுக்கொண்டு, முன் வரிசையில் கண்ணீருடன் உனக்காக கோஷம் போடுகிறேன். எனக்காக முன் வரிசையில் ஒரு சீட் மட்டும் ரிசர்வ் பண்ணிடுவியா?” என்று நக்கலாகக் கேட்டு அரட்டையை இன்னும் சுவாரசியமாக்கினார்.