உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில்  பிருந்தாவன் யோஜனா பகுதியில் இயங்கி வரும் ஏஎல்எஸ் அகாடமியில் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு நர்சரி படித்து வரும் 5 வயது சிறுவன் ஒருவனை, அவனது வகுப்பறை மானிட்டரான  ஒரு சிறுமி சுமார் 12 நிமிடங்களுக்கும் மேலாகக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் சிறுவனின் முகம் மற்றும் கன்னங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அதாவது பிரிஜேந்திர குமார் என்பவரின் 5 வயது மகன் கிருதய், அந்தப் பள்ளியில் நர்சரி படித்து வருகிறான். புதன்கிழமை அன்று பள்ளி முடிந்து கிருதய் வீட்டிற்குத் திரும்பியபோது, அவனது முகம் முழுவதும் வீங்கிப் போய், கடுமையான காயங்களுடன் அழுதுகொண்டே இருந்துள்ளான். மேலும், குழந்தை ஏதோ ஒரு பயத்தில் உறைந்து போயிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர், உடனடியாகப் பள்ளிக்கு விரைந்து சென்று இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

தொடர்ந்து, தங்களது குழந்தையின் வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி  காட்சிகளைப் போட்டுக் காட்டுமாறு பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். அப்போது அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்த அங்கிருந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்த வீடியோவில், வகுப்பறை மானிட்டராக இருக்கும் ஒரு சிறுமி, 5 வயது சிறுவன் கிருதயை இடைவிடாமல் கன்னத்தில் அறைந்தும், குத்தியும் கொடூரமாகத் தாக்குவது பதிவாகியிருந்தது. அதுமட்டுமன்றி, அந்தச் சிறுவனின் முடியைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளித் தாக்கியதும் தெரியவந்துள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதல் சுமார் 12 நிமிடங்கள் வரை நீடித்த போதிலும், அந்த வகுப்பறைக்கு எந்தவொரு ஆசிரியரோ அல்லது பள்ளி ஊழியர்களோ வந்து தடுக்கவில்லை என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வியாழக்கிழமை அன்று பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்துப் பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவி உடனடியாகப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகப் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி ஆதாரங்களுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.