ஆந்திர மாநிலம் கர்னூலில், முன்னாள் காதலனைப் பிரிப்பதற்காக அவரது மனைவிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய பெண்ணையும், அவருக்கு உதவிய நர்ஸ் மற்றும் அவரது மகன்களையும் போலீஸார் கைது செய்தனர்.
கர்னூல் பகுதியைச் சேர்ந்த போய வசுந்தரா (34) என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு மருத்துவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் இடையில் முறிந்த நிலையில், அந்த மருத்துவர் சக பெண் மருத்துவர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர், அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
தனது காதலனைத் திருமணம் செய்த பெண் மீது கடும் பொறாமை கொண்ட வசுந்தரா, அந்தத் தம்பதியை எப்படியாவது பிரிக்கத் திட்டமிட்டார். இதற்காக, பெண் மருத்துவருக்கு எச்.ஐ.வி. கிருமியைப் பரப்ப முடிவு செய்தார். அரசு மருத்துவமனையில் ஆராய்ச்சிக்குத் தேவைப்படுவதாகப் பொய் கூறி, எச்.ஐ.வி. நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்தத்தைப் பெற்று, அதைத் தனது வீட்டில் ரகசியமாகப் பராமரித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று, பணி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் மருத்துவர் மீது, வசுந்தரா ஏவிவிட்ட இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளால் மோதினர். இதில் நிலைதடுமாறிப் பெண் மருத்துவர் கீழே விழுந்தார். அப்போது, அவருக்கு உதவுவது போல நடித்த வசுந்தரா, ஆட்டோ ஒன்றில் அவரை ஏற்ற முயன்றார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மறைத்து வைத்திருந்த எச்.ஐ.வி. ரத்தம் கலந்த ஊசியைப் பெண் மருத்துவரின் உடலில் செலுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிடவே, வசுந்தரா அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் கணவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் வசுந்தராவின் சதித் திட்டம் அம்பலமானது. இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்த நர்ஸ் காங்கே ஜோதி (40) மற்றும் விபத்தை ஏற்படுத்திய அவரது இரண்டு மகன்கள் உட்பட, போய வசுந்தரா உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் கர்னூல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
