நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராத்திரி சிவராத்திரி’ என்ற பழைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக  இளையராஜா, வனிதா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த வனிதா, “நான் என்னுடைய தரப்பு நியாயத்தை முன்னதாகவே விளக்கியுள்ளேன். இப்போது இளையராஜா தான் மைக் பிடித்து பதில் சொல்ல வேண்டும்” எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், “அந்த பாடலை பயன்படுத்தும் முன் அவரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றேன். பாடலுக்கான உரிமை சோனி மியூசிக்கிடம் உள்ளது. அவர்கள் அனுமதியுடன் பாடலை பயன்படுத்தியேன். ஆனாலும் அவர் நீதிமன்றத்திற்குச் சென்றது எனக்கு புரியவில்லை” என்றார்.

“நான் இளையராஜா சார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அவரிடம் நேரில் கூறியும் பாடலை பயன்படுத்தினேன். எனக்குத் தெரிந்தவரை அவரிடம் கோபமில்லை. இருப்பினும், என்னிடம் நேரில் வந்து கேட்காமல் நீதிமன்றத்தை நாடுவது ஏன்? என் மீது கோபம் இருந்தால் கூப்பிட்டு திட்டியிருக்கலாம். ஆனால் இப்போது நீதிமன்றம் போனதால் நானும் சட்ட ரீதியாக தான் பார்த்துக் கொள்வேன்.”

இளையராஜா குடும்பத்தில் ஏற்கனவே பிளவு இருப்பதாகவும், இந்த பாடலின் உரிமையை தனது பெரியப்பா தான் வழங்கியதாகவும் வனிதா தெரிவித்திருக்கிறார். மேலும், “பெத்த அப்பனையே பார்த்துவிட்டேன்… இனி என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்கிறேன்” என உருக்கமாகவும்,  பதிலளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இளையராஜா சார்பில் இதற்கான விளக்கம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.