தமிழ் சினிமாவிலும், இந்திய அரசியலிலும் வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அங்கு செட்டிலாக அவரது மகன் தனுஷின் உடல்நலக் காரணமே. தனுஷ் muscular dystrophy எனப்படும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 10 வயதிற்கு மேல் நடக்க முடியாத நிலையில் உள்ள அவருக்காக, உலகத் தரமான சிகிச்சைக்காக நெப்போலியன் அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு இடம் மாறினார்.
தனுஷின் நிலையை யூடியூபர் இர்ஃபான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து, நெப்போலியனின் தந்தை உள்ளத்தை மக்கள் பாராட்டத் தொடங்கினர். மகனுக்காக வீடு முதல் கார் வரை அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளார். மேலும், மயோபதி என்ற மருத்துவமனையையும் தமிழகத்தில் தொடங்கி, இதே நோயால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கான இலவச சிகிச்சையை வழங்கி வருகிறார்.
View this post on Instagram
கடந்த ஆண்டு நவம்பரில் ஜப்பானில், திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் தனுஷின் திருமணம் கோலாகலமாக நடத்தப்பட்டது. விமானத்தில் அழைத்து செல்ல முடியாததால், கப்பலில் அமெரிக்காவிலிருந்து ஜப்பான் வரை 3 மாதங்கள் பயணித்து மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்தியவர் நெப்போலியன்.
இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் நெப்போலியனை சந்தித்து தனுஷை பாராட்டும் வகையில், ‘குக் வித் கோமாளி’ புகழ் மாதம்பட்டி ரங்கராஜ், ‘பரிதாபங்கள்’ நிகழ்ச்சியின் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நேரில் சென்றுள்ளனர்.
தனுஷுடன் உரையாடிய இந்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன. “உங்கள் வீடியோக்களை மிஸ் பண்ணாம பார்ப்பேன்” என்று தனுஷ் கூறியுள்ள சம்பவம் பலரது உள்ளங்களையும் தொட்டிருக்கிறது. “மூத்த மகன் தனுஷுக்கு மகிழ்ச்சியளித்தீர்கள்… நாங்கள் உங்களுக்கு மிக்க நன்றி கூறுகிறோம்” என நெப்போலியன் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
