யாருக்காக வீட்டை விட்டு வெளியேறினேனோ, யாரை உயிராகக் காதலித்தேனோ, அவரே என் பிள்ளைகளின் கொலையாளியாவார் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று  தனது இரு மகள்களைப் பறிகொடுத்த தாயின் இந்தக் கதறல் ஒட்டுமொத்த நகரத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரேஷ்மா மற்றும் பீகாரைச் சேர்ந்த சஷி ரஞ்சன் மிஸ்ரா ஆகியோரின் காதல் கதை 2014-இல் திருமணத்தில் முடிந்தது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது வாழ்க்கையில், ரித்தி மற்றும் சித்தி (11 வயது) என்ற இரட்டை பெண் குழந்தைகள் பிறந்த பிறகு மாற்றம் ஏற்பட்டது. தந்தை சஷி ரஞ்சன் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால், குடும்பத்தில் விரிசல் விழுந்தது.

மது போதைக்கு அடிமையான சஷி ரஞ்சன், தனது மனைவி மீது தீராத சந்தேகம் கொண்டுள்ளார். தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பையே ஒரு கோட்டை போல மாற்றியுள்ளார். வீட்டின் மூலை முடுக்கெல்லாம் 6 சிசிடிவி கேமராக்களைப் பொருத்திய அவர், ஒரு ரகசிய அறையில் தானும் தனது மகள்களும் மட்டுமே இருக்க வேண்டும் என விதி வைத்துள்ளார். மனைவி ரேஷ்மா அந்த அறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது; அவர் தொலைக்காட்சியில் சிசிடிவி காட்சிகள் மூலமாக மட்டுமே குழந்தைகளைப் பார்க்க முடியும் என்ற கொடுமை அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று நள்ளிரவு 1:30 மணி அளவில் தனது ஒரு மகள் கழிவறைக்குச் செல்வதை ரேஷ்மா சிசிடிவி கேமராவில் பார்த்துள்ளார். அப்போது வரை அனைத்தும் சரியாக இருந்துள்ளது. ஆனால், அதிகாலை 4:30 மணி அளவில் சஷி ரஞ்சனே காவல்துறைக்குத் தொலைபேசியில் அழைத்து, “நானே என் இரு மகள்களையும் கொன்றுவிட்டேன்” என்று கூறியுள்ளார். போலீசார் விரைந்து சென்றபோது, ரத்த வெள்ளத்தில் கிடந்த மகள்களின் சடலங்களுக்கு அருகே, எந்த சலனமும் இன்றி சஷி ரஞ்சன் கல்நெஞ்சக்காரனாக அமர்ந்திருந்தார். போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்தனர்.

தனது 11 ஆண்டு கால காதல் வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடிக்கும் ரேஷ்மா, தற்போது தனது கைக்குழந்தையான மகனை அணைத்தபடி நீதி கேட்டுப் போராடுகிறார். காதலித்து கைபிடித்தவனே என் கண்மணிகளைக் கொன்றுவிட்டான். இந்த அரக்கனுக்குத் தூக்குத் தண்டனை மட்டுமே சரியான தீர்வாக இருக்கும் என்று அவர் கதறுகிறார். கொலையின் பின்னணியில் உள்ள துல்லியமான காரணம் குறித்து போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.