ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்கள் என்றாலே சொகுசு வாழ்க்கை, கோடிக்கணக்கில் நிதி எனப் புகழப்படும் பிம்பத்திற்குப் பின்னால் இருக்கும் தூக்கமில்லா இரவுகளையும், மன அழுத்தத்தையும் டெல்லியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். ‘ஹைப்ஸ்கூல்’ (Hypeschool) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனரான நிகில் கவுர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிகாலை 5 மணிக்கு அவர் தனது அலுவலகத்திற்குத் தனியாக வருவதைக் காட்டியுள்ளார்.

“இப்போது காலை 5 மணி. அலுவலகத்தில் ஒரு ஆள் கூட இல்லை. ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு மன அழுத்தம், வியாபாரத்தில் பின்னடைவு எனத் தூக்கமில்லாத இரவுகள் எனக்கு நேரிடும். அத்தகைய சமயங்களில் அதிகாலை 2 மணி அல்லது 3 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்துவிடுவேன். இன்று அப்படிப்பட்ட ஒரு நாள்தான்” என்று அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இன்றைய இளைஞர்கள் பலரும் ஸ்டார்ட்அப் தொடங்குவதை ஒரு கௌரவமாகவும், ஜொலிக்கும் வாழ்க்கையாகவும் கருதுகின்றனர். ஆனால் அதன் பின்னணியில் உள்ள போராட்டங்கள் யாருக்கும் தெரிவதில்லை என நிகில் கூறுகிறார். ஸ்டார்ட்அப் கலாச்சாரம் இங்கே அளவுக்கு அதிகமாகப் புகழப்படுகிறது. அதன் பின்னணியில் இருக்கும் ரத்தமும் வியர்வையும் யாருக்கும் தெரிவதில்லை. வழக்கமான உழைப்பைத் தாண்டி, கூடுதலாக 20 சதவீத முயற்சியைக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே இந்த நிச்சயமற்ற தன்மையைக் கையாள முடியும். ஒரு நிறுவனம் ஒரே இரவில் உருவாவதில்லை. அதற்குப் பல ஆண்டுகால உழைப்பு தேவை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகில் கவுரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். பலரும் நிதி திரட்டும் செய்திகளை மட்டுமே பார்க்கிறார்கள். இது போன்ற தூக்கமில்லாத இரவுகளை யாரும் பார்ப்பதில்லை. உண்மையை உரக்கச் சொன்னதற்குப் பாராட்டுகள” என ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது வெறும் விளம்பர யுக்திதான். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் சரியாகத் திட்டமிட்டு உழைத்தாலே போதுமானது. தேவையில்லாமல் வேலையைச் சுமையாக மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை” எனச் சில பயனர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் “லிங்க்டுஇன் (LinkedIn) போன்ற தளங்களில் ஸ்டார்ட்அப் வாழ்க்கை பார்ப்பதற்கு ‘கூல்’ ஆகத் தெரிந்தாலும், நிஜத்தில் இது ஒரு போராட்டக் களம்” என்ற நிகிலின் பதிவு, தற்போது தொழில்முனைவோர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.