சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சுவாரசியமான விவாதம் வைரலாகி வருகிறது. 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருந்தும், ஆடம்பரங்களைத் தவிர்த்து சாதாரண மனிதனைப் போல ஆட்டோவிலும், ஷேர் ஆட்டோவிலும் பயணிக்கும் ஒரு தொழிலதிபரின் கதை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ‘நேச்சுரலி யுவர்ஸ்’ (Naturally Yours) என்ற நூடுல்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான வினோத் செந்தில், தனது நண்பரைப் பற்றிய இந்தத் தகவலை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த நண்பரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது வாழ்க்கை முறை குறித்த விவரங்கள் இணையவாசிகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
பொதுவாக ஒருவரது வருமானம் உயர்ந்தாலே கார், பங்களா என வாழ்க்கை தரம் மாறிவிடும். ஆனால், 100 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பு கொண்ட இந்தத் தொழிலதிபர் இன்றும் மும்பையில் எங்கு சென்றாலும் ஆட்டோ அல்லது ஷேர் டாக்ஸிகளையே பயன்படுத்துகிறார். தங்குவதற்கு சாதாரண ஹோட்டல்களையே தேர்ந்தெடுக்கிறார். இதுவரை விலை உயர்ந்த சொகுசு கார்கள் எதையும் வாங்கவில்லை.
My founder friend who has 100cr net worth.
Travels by auto whenever in Mumbai, takes share auto/taxi wherever possible, stays at simple hotels, has not bought an expensive vehicle.
Only thing that has changed is that he has more vacations/free time now. https://t.co/Ieoy5AmPE5
— Vinod Chendhil (@vinodchendhil) April 19, 2026
அவரது வாழ்க்கையில் பெரிய அளவில் ஏற்பட்ட ஒரே மாற்றம் என்னவென்றால், முன்பு இருந்ததை விட இப்போது அவர் அதிக அளவில் விடுமுறை எடுத்துக்கொண்டு சுற்றுலா செல்கிறார். தனக்கான நேரத்தை அவர் அதிகப்படுத்துவதை மட்டுமே முக்கியமாகக் கருதுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு கீழே பயனர்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இவ்வளவு பணம் இருந்தும் ஏன் கஷ்டப்பட வேண்டும்? பணமே வசதியாக வாழ்வதற்குத்தானே?” என்று சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வினோத் செந்தில், “அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இது அவரது தனிப்பட்ட விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், “100 கோடியில் 10 சதவீதத்தை வங்கியில் போட்டாலே கிடைக்கும் வட்டியில் ராஜவாழ்க்கை வாழலாம். இதில் பெருமைப்பட எதுவுமில்லை” என்று சாடியுள்ளார். இருப்பினும், “தொழிலில் சிக்கனமாக இருப்பதும், வாழ்க்கையை எளிமையாக வைத்திருப்பதும் ஒரு கலை” என பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம், “பணம் என்பது வசதிக்காகவா அல்லது மனநிறைவிற்காகவா?” என்ற புதிய விவாதத்தை இணையத்தில் கிளப்பியுள்ளது.
