உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில், இந்தியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இது தொடர்பான பதற்றமான ஆடியோ உரையாடல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 30 வினாடிகள் ஓடும் அந்த ஆடியோவில், ‘சன்மார் ஹெரால்டு’ (Sanmar Herald) என்ற இந்தியக் கப்பலில் உள்ள மாலுமி ஒருவர் ஈரானின் ‘செபா’ (Sepah) கடற்படையிடம் மிகவும் பதற்றத்துடன் உதவி கோருவது பதிவாகியுள்ளது. அதில், “செபா கடற்படையே… இது சன்மார் ஹெரால்டு கப்பல் பேசுகிறேன். நீங்கள் தான் எங்களுக்கு அனுமதி கொடுத்தீர்கள்… ஆனால் இப்போது நீங்கள் துப்பாக்கியால் சுடுகிறீர்கள். தயவுசெய்து எங்களை மீண்டும் பின்னோக்கிச் செல்ல அனுமதி வழங்குங்கள்” என்று அவர் கெஞ்சுவது இதயத்தை உருக்கும் வகையில் உள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படைக்கு சொந்தமான ரோந்துக் கப்பல்கள், திடீரென வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன. கெஷ்ம் மற்றும் லாரக் தீவுகளுக்கு இடையே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் இரண்டு இந்தியக் கப்பல்கள் தங்களது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு பின்வாங்கின. ஒரு கப்பலில் மட்டும் சுமார் 20 லட்சம் பேரல் ஈராக் கச்சா எண்ணெய் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ அல்லது கப்பல்களுக்கு பெரிய சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பயணிக்கும் மற்ற வணிகக் கப்பல்களின் மாலுமிகள் கடும் பீதியில் உள்ளனர். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், இந்தியக் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தற்போது வெளியாகியுள்ள இந்த ஆடியோ உரையாடல், அந்த நீரிணையில் நிலவும் அபாயகரமான சூழலை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.