அலுவலகத்தில் ஒரு ஊழியர் வேலை செய்யாமல் எப்போதும் தேநீர் (Tea) குடித்துக்கொண்டே இருக்கிறார் என்று சக ஊழியர்கள் புகார் அளிக்க, அதன் பின்னணியில் இருந்த உன்னதமான உண்மையை அறிந்து அந்த ஊழியருக்கு நிர்வாகம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்துள்ளது.

துருக்கியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மீது, அவர் நாள் முழுவதும் தேநீர் குடித்துக்கொண்டு பொழுதைக் கழிக்கிறார் என்றும், வேலையில் கவனம் செலுத்துவதில்லை என்றும் சக பணியாளர்கள் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். புகார்கள் அதிகரித்ததையடுத்து, உண்மை நிலையை அறிய அலுவலகத்தின் கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ய நிர்வாகம் முடிவெடுத்தது.

 

நிர்வாகத்தினர் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர்களுக்கு பெரும் வியப்பு காத்திருந்தது. அந்த ஊழியர் தேநீர் குடிப்பது உண்மைதான், ஆனால் அவர் ஓய்வெடுப்பதற்காக அதைக் குடிக்கவில்லை. மாறாக, அலுவலகத்தில் மற்றவர்கள் வேலை முடிந்து சென்ற பிறகும், நள்ளிரவு வரை அமர்ந்து கடினமாக உழைத்துக் கொண்டிருந்தார்.

அதிகப்படியான வேலைப்பளு காரணமாக தூக்கம் வராமல் இருப்பதற்காகவும், புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து பணியாற்றவுமே அவர் அடிக்கடி தேநீர் அருந்தியது கேமரா காட்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது. மற்றவர்கள் வேலை நேரத்தில் பார்த்த ஒரு சிறு பகுதியை வைத்து அவர் மீது தவறான புகாரை அளித்துள்ளனர் என்பது தெரியவந்தது.

ஊழியரின் அர்ப்பணிப்பைக் கண்டு நெகிழ்ந்து போன நிர்வாகம், அவருக்கு அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, அவரது கடின உழைப்பைப் பாராட்டி ஒரு மாத சம்பளத்தை ‘போனஸ்’ ஆக  வழங்கி கௌரவித்தது. மேலும் புறம் பேசுவதை விட உண்மையை ஆராய்வதே சிறந்தது” என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.