இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பிஸியான முதன்மைச் சாலை ஒன்றில் விதிமுறைகளை மீறி தவறான திசையில் (Wrong side) காரை ஓட்டி வந்த பெண் ஒருவர், எதிரே வந்த லாரியை மறித்து நின்றதோடு, மற்ற வாகன ஓட்டிகள் கெஞ்சிக் கேட்டும் காரை பின்னோக்கி (Reverse) எடுக்க மறுத்து “நான் ஒரு பெண்” என்று கூறி நடுத்தெருவில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விநோதமான சம்பவம் ஒட்டுமொத்த டிராஃபிக்கையும் ஸ்தம்பிக்க வைத்து சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அந்தப் பெண் ஓட்டி வந்த ஹேட்ச்பேக் ரக கார் ஒன்று ஒரு பெரிய லாரிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு மற்ற பக்கத்து டிராஃபிக்கையும் முற்றிலுமாக முடக்கியதை அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். வீடியோ எடுத்த நபர், “உங்களால்தான் கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, காரை பின்னால் எடுங்கள்” என்று கூறியதற்கு, அந்தப் பெண் தான் ஒரு பெண் என்பதால் தனக்குச் சலுகை இருப்பது போலப் பேசி பிடிவாதம் பிடித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் அசுர வேகத்தில் பரவியதைத் தொடர்ந்து, ‘இவருடைய ஓட்டுநர் உரிமத்தை (License) ரத்து செய்வதோடு, டெல்லி போக்குவரத்து போலீசார் இவருக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும், டிராஃபிக் போலீசார் அப்போது எங்கே போனார்கள்?’ என்று நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில், ‘ஆண்கள் தினமும் எத்தனையோ விபத்துகளையும், ராங் சைடு டிரைவிங்கையும் செய்கிறார்கள், அப்போதெல்லாம் ஒட்டுமொத்த ஆண் சமூகத்தையும் யாரும் பழிப்பதில்லை; ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் ஒட்டுமொத்தப் பெண் இனத்தையுமே குறிவைக்கிறார்கள்’ என்று சோசியல் மீடியாக்களில் பாலினப் பாகுபாடு குறித்த காரசாரமான விவாதங்களும் வெடித்துள்ளதால், இந்த டெல்லி பெண்ணின் டிராஃபிக் ஜாம் வீடியோ தற்பொழுது இணையதளத்தின் டாப் ட்ரெண்டிங் செய்தியாக மாறியுள்ளது.