பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதலாவது மாநாட்டில், தற்போதைய அரசியல் சூழல், சாதி-மத அரசியல் மற்றும் பா.ஜ.க குறித்தான தனது நிலைப்பாட்டை அண்ணாமலை மிகத் தெளிவாகவும் ஆவேசமாகவும் விவரித்துள்ளார். தான் முன்பு சார்ந்திருந்த பா.ஜ.க, அ.தி.மு.க மற்றும் தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்து விலகிப் பலர் இந்த அமைப்பில் இணைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் மீதுள்ள அக்கறையாலும் தமிழ்நாட்டிற்கு இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்கவுமே பலரும் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார்.
தான் யாருக்கு எதிராகவும் பேசாமல் கண்ணிய அரசியல் செய்வதைக் கண்டு, தி.மு.க-வினர் தன்னை ‘பா.ஜ.க-வின் பி டீம்’ எனச் சந்தேகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்த தேசியவாதி என்றும், இந்தியன் என்பதில் கர்வமும், அதில் தமிழ்நாடு முன்னிலையில் வரவேண்டும் என்பதே தனது போராட்டம் என்றும் முழங்கினார்.
மேலும், தனது இந்துத்துவா தத்துவத்தை விளக்கிய அண்ணாமலை, தான் ஒரு இந்துவாக இருந்தபோதிலும் வீட்டை விட்டு வெளியே வரும்போது சாதி, மதங்களைப் பூட்டி வைத்துவிட்டுச் சாமானிய மனிதனாகவே வருவதாகவும், உண்மையான இந்து அனைவரையும் சமமாகவே பார்ப்பான் என்றும் திட்டவட்டமாகக் கூறினார். இனாம் நில விவகாரத்தில் தனக்கு ‘இந்து விரோதி’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், 2024-ல் எச்.ராஜாவும், 2026 தேர்தல் அறிக்கையில் எடப்பாடி பழனிசாமியும் அதே நில விவகாரத்தைப் பேசியபோது அவர்கள் இந்து விரோதிகள் ஆகவில்லை என்று சாடினார்.
மேலும் சாதி, மதத்தை வைத்து இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் நடந்த சாக்கடை அரசியல் இனி தங்களது அமைப்புக்குத் தேவை இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்த அண்ணாமலை, “ஒருங்கிணைந்த இந்தியா, முதன்மை தமிழ்நாடு” என்பதுதான் தங்களது மாற்று அரசியல் கொள்கை என்று முத்தாய்ப்பாகப் பேசினார்.
