தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தரமான பொருட்களை விநியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் தரம் குறித்து கடந்த மூன்று மாதங்களாகத் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாகத் தரமான அரிசி வழங்குவதற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ‘தாயுமானவன்’ திட்டம் மூலமாக, அவர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் அடுத்த இரண்டு வார காலத்திற்குள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வருங்காலங்களில் ரேஷன் கடைகளில் பொருட்களைப் பெற, தற்போதுள்ள கைரேகை மற்றும் கண்விழிப் பதிவுடன் சேர்த்து, முகப் பதிவு  முறையையும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் பொதுமக்களுக்குத் தடையற்ற மற்றும் தரமான சேவையை உறுதி செய்யும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.