மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கும் பெண்ணுக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான ஒரு ஆண்டிற்குள் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

இதனால், 2014 டிசம்பர் மாதம் முதல் இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கினர். தொடர்ந்து, கணவர் 2015ஆம் ஆண்டு புனே நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த புனே நீதிமன்றம், தம்பதியர் இடையே இடைவெளி நீடித்து வருவதையும், உரிய தளர்வுகள் இல்லாததையும் கருத்தில் கொண்டு, கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து, அவரது மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

தனது மனுவில், “கணவரின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் என்னை தொடர்ந்து துன்புறுத்தியுள்ளனர். இருப்பினும், என் கணவரை நான் இன்னும் காதலிக்கிறேன். அவருடன் வாழவேண்டும் என்பதே என் விருப்பம். எனவே, கோர்ட்டு வழங்கிய விவாகரத்து உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், முன்னாள் கணவரின் தரப்பில் உள்ள வாதங்களை கேட்டது. அதில், “என் மனைவி உடல் ரீதியிலான உறவை ஏற்க மறுத்தார். நான் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதாக சிந்தனைதான் காரணமின்றி சந்தேகப்பட்டார். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் என்னை அவமதித்தார். மேலும், எந்த ஒரு புரிந்துணர்வும் இல்லாமல் வீட்டை விட்டு சென்று விட்டார். எனவே, அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பமில்லை” எனக் கூறினார்.

இரு தரப்பின் வாதங்களையும் கவனித்த நீதிபதிகள், “கணவருடன் உடல் உறவுக்கு மறுப்பது, காரணமின்றி சந்தேகிப்பது, பொது இடங்களில் அவமானப்படுத்துவது ஆகியவை கொடூரமான திருமண மீறல் குற்றங்களில் சேரும்” எனக் கூறினர். மேலும், மாவட்ட நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவு சட்டப்படி சரியாகவே உள்ளதால், அதனை ரத்து செய்ய முடியாது என்றும் தெரிவித்தனர்.

எனவே, மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, விவாகரத்து உத்தரவை உறுதிப்படுத்தி மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.