பீகார் மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் வெப்பக்காற்று மற்றும் மழையுடன் கூடிய பருவமழை தாக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் பல உயிரிழப்புகள் நிகழ்ந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக 34 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மின்னல் தாக்கியதில் நலந்தா மற்றும் வைஷாலி மாவட்டங்களில் தலா 6 பேர், ஷேக்புராவில் 5 பேர், பாட்னா மற்றும் அவுரங்காபாத் பகுதிகளில் தலா 3 பேர், நவாடா மற்றும் பங்காவில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், போஜ்பூர், பாகல்பூர், ரோடாஸ், கயாஜி, சமஸ்திபூர் மற்றும் ஜமுய் மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குட்பட்ட 6 பேர் தற்போது படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மாநில முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழையுடனும் மின்னல் தாக்கத்துடனும் கூடிய நேரங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க, அரசு எச்சரிக்கை அறிவிப்புகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
