கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பரப்புக்கரா பகுதியைச் சேர்ந்த அகில் (28) என்பவர், இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த காதலை இளம்பெண் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், அகில் தொடர்ந்து தனது காதலை வெளிப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த இளம்பெண், இந்த விவகாரத்தை தனது சகோதரரும், ரவுடி என அறியப்படும் ரோகித் (32) என்பவரிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட ரோகித் ஆத்திரமடைந்து, அகிலை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்காக, தனது நண்பர்களான விபின் என்ற போப்பி (34), கிரிஷ் (36) ஆகியோருடன் ரோகித், அகில் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிலிருந்து அகிலை வெளியே வரவழைத்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த ரோகித் மற்றும் அவரது நண்பர்கள் அகிலை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதும், மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர், படுகாயமடைந்த அகிலை அப்பகுதி மக்கள் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இளம்பெண்ணிடம் காதலை தெரிவித்ததற்காக, அவரது சகோதரர் ரோகித் நண்பர்களுடன் சேர்ந்து அகிலை கொலை செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் இதையடுத்து, திருச்சூரில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற ரோகித், விபின், கிரிஷ் ஆகிய மூவரும் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
