மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த 5 வயது சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது நேற்று முன்தினம் திடீரென மாயமானாள். இதுகுறித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று சிறுமி வீட்டிற்கு அருகிலேயே சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடம் மற்றும் சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த விசாரணையின் அடிப்படையில், சிறுமியின் வீட்டிற்கு அருகே வசித்து வந்த 32 வயது வாலிபர் ஒருவரின் அடையாளம் தெரியவந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி சிறுமியை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும், சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் சிறுமியை கொலை செய்ததும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளியை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
