கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ள ஒரு  பகுதியில் வசித்து வந்த லட்சுமிநாராயணாவின் மனைவி ஐஸ்வர்யா (22), நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் ஐஸ்வர்யா, லட்சுமிநாராயணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் நடைபெற்று தற்போது 6 மாதங்களே ஆன நிலையில், தம்பதி மாதநாயக்கனஹள்ளியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தனது தங்கையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள, கணவர் தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என ஐஸ்வர்யா விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் அந்த விழாவுக்கு செல்ல முடியாததால் மனவேதனையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஐஸ்வர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும்  போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.