மலையாள நடிகை ஒருவர் 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கடந்த வாரம் ஆறு குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை நீண்ட மவுனத்தை கலைத்து, தீர்ப்பு குறித்து தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார். எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய ஆறு பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது. முதல் குற்றவாளியான ‘பல்சர்’ சுனிலுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அனைத்து தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. அதே நேரத்தில், இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மலையாள நடிகர் திலீப்பை நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த நடிகை பாவனா,
“8 ஆண்டுகள், 9 மாதங்கள், 23 நாட்கள் நீண்ட வலி, போராட்டம் மற்றும் கண்ணீருக்குப் பிறகு, ஒரு சிறிய நம்பிக்கையின் ஒளியை கண்டுள்ளேன். ஆறு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். தனது புகாரை பொய்யானது என்று விமர்சித்தவர்களுக்குப் பதிலளித்த அவர்,
“எனது வலி உண்மை அல்ல என கூறியவர்கள், இப்போது உண்மையை புரிந்து கொள்வார்கள்” என தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Bhavana🧚🏻‍♀️Mrs.June6 (@bhavzmenon)


முதல் குற்றவாளி தனது தனிப்பட்ட ஓட்டுநர் என்ற தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
“அவர் எனது ஓட்டுநரும் இல்லை, ஊழியரும் இல்லை. 2016-ல் நான் நடித்த ஒரு படப்பிடிப்பின்போது மட்டும், ஓட்டுநராக ஒருமுறை அல்லது இருமுறை பார்த்துள்ளேன். அதன் பிறகு இந்த சம்பவம் வரை அவரை சந்தித்ததே இல்லை. தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் விசாரணை குறித்து தனக்கு முன்பே சந்தேகம் எழுந்ததாகவும் நடிகை தெரிவித்துள்ளார். “2020-ம் ஆண்டிலேயே, குறிப்பிட்ட ஒரு குற்றவாளி தொடர்பான விசாரணையில் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தேன். விசாரணை கையாளப்பட்ட விதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதை அரசுத் தரப்பே கவனித்தது” என அவர் கூறியுள்ளார். விசாரணை நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் பலமுறை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகியதாகவும், ஆனால் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்த நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஒரு கடுமையான உண்மையை உணர்ந்தேன். இந்த நாட்டில் சட்டத்தின் முன் அனைவருக்கும் சம நீதி கிடைப்பதில்லை. ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரே விதமாக செயல்படுவதில்லை” என தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். விசாரணை நீதிமன்றத்தை ஏன் நம்பவில்லை என்பதற்கான காரணங்களையும் நடிகை பட்டியலிட்டுள்ளார். அதில், தனது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை. முக்கிய ஆதாரமான மெமரி கார்டு நீதிமன்றக் காவலில் இருந்தபோது மூன்று முறை சட்டவிரோதமாக அணுகப்பட்டது. வழக்குச் சூழல் அரசுத் தரப்புக்கு எதிராக மாறியதாகக் கூறி, இரண்டு அரசு வழக்கறிஞர்கள் வழக்கில் இருந்து விலகினர். மெமரி கார்டு தொடர்பான விசாரணை அறிக்கை கோரியபோதும் அது வழங்கப்படவில்லை  உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

மேலும், இந்த வழக்கை அதே நீதிபதி தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என குற்றவாளி தரப்பு மனுத் தாக்கல் செய்தது சந்தேகங்களை அதிகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கும் கடிதம் எழுதியதாகவும், விசாரணையை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக் கோரிய தனது மனு நிராகரிக்கப்பட்டதாகவும் நடிகை தெரிவித்துள்ளார். தனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர்  “பணம் பெற்று தவறான கதைகளை பரப்பி என்னை தாக்குபவர்கள், அதைத் தொடரலாம். ஆனால் உண்மை என்றென்றும் நிலைக்கும்” எனத் தெரிவித்தார்.