கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது.
இதன் ஒரு பகுதியாக இடவக்கோடு வார்டில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சார்பில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்த சி.எம்.பி. கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் சினி மீண்டும் போட்டியிட்டார். இந்த முறையும் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சுவாதி 1,889 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சினி 1,863 வாக்குகள் பெற்றிருந்தார். இதனால் அவர் 26 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த வார்டில் ‘சினி’ என்ற பெயரில் மேலும் இரு பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு, மொத்தமாக 44 வாக்குகள் பெற்றிருந்தனர். இதுவே சினியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்த எதிர்பாராத தோல்வியால் கடும் மனஅழுத்தத்தில் இருந்த சினி, வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் சினிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
