நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை திருவேற்காட்டில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், கல்வி நிலையங்களில் அரசியல் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டி, “பள்ளிகளில் அரசியல் பேசக்கூடாது, கல்லூரிகளில் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள். ஆனால் சினிமாவைப் பேசலாம். பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

அந்த மேடைகளில் மொழி, வளம், பண்பாடு பற்றிய பாடல்கள் இருக்காது. முழுக்க திரைப்பாடல்களும் நடனங்களும் தான் இடம்பெறுகின்றன” என்றார். மேலும், “இப்போது இந்த திரைக் கவர்ச்சி ஒரு மதமாக மாறி நிற்கிறது. ஒருகாலத்தில் இறை வழிபாட்டை விமர்சித்த கட்சிகளே, இன்று திரைக் கவர்ச்சி வழிபாட்டை போற்றி வருகின்றன. கதாநாயகன் வழிபாடு, கடவுள் வழிபாட்டைவிட மேலானதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நல்லது எது என்று தெரியாத நிலை உருவாகியுள்ளது. நடிகர் ஒருவர் நாட்டை ஆள தயாராகிவிட்டார்” என விமர்சித்தார்.

அரசியலில் பணப் புழக்கம் குறித்து பேசிய சீமான், “காசு கொடுத்தால்தான் பெரிய கட்சி என்று சொல்பவர்கள் கூட, ஓட்டுக்கு பணம் கொடுத்தால்தான் சொந்த கட்சிக்காரனே ஓட்டு போடுவான். மாநாட்டுக்கு வரவும் பணம் கொடுக்க வேண்டும். அங்கு வந்த பிறகும் சாப்பாடு தாமதமானால், அவனே வேறு இடம் தேடி ஓடிவிடுவான். ஆனால் எங்களிடம் கூடிய கூட்டம், காசு கொடுக்காமல் கூடிய கூட்டம்” என்றார்.

“என்னைப் போல தனித்து தேர்தலில் போட்டியிட்டு, கொள்கை, கோட்பாடுகளை சொல்லி ஓட்டு கேட்டு வென்று காட்டுங்கள். அப்போதுதான் அது உண்மையான வெற்றி. நான் இலவசங்களை எதிர்ப்பவன். இலவசங்கள் வளர்ச்சி திட்டமல்ல; அது மக்களை அடிமையாக்கும் வீழ்ச்சி திட்டம்” என்றார்.

“மக்களுக்கு தரமான கல்வி, நல்ல வேலை, வேலைக்கு ஏற்ற சம்பளம், தூய குடிநீர், சீரான சாலைகள், தரமான மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் முதல் குடிமகனுக்கு கிடைக்கும் சிகிச்சை, கடை கோடியில் உள்ள சாதாரண மனிதனுக்கும் கிடைக்க வேண்டும்” என்றார்.

இதனை உறுதிப்படுத்த, “முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வருவேன். அப்போது அரசு மருத்துவமனைகள் தானாகவே உயர்ந்திடும்” என தெரிவித்தார்.

மேலும், “அதேபோல், அரசு ஆசிரியர்கள், அரசு அதிகாரிகளின் மகன்கள், மகள்கள் அனைவரும் அரசு பள்ளி, அரசு கல்லூரிகளில் தான் படிக்க வேண்டும். அவ்வாறு படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும். இதன் மூலம் வறுமை இல்லாத, தரமான வாழ்க்கை நிலையை உருவாக்குவேன்” என சீமான் பேசினார்.