சென்னை திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இதில் சுமார் 2 ஆயிரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், “நீங்களும் நடிகர் விஜய்யும் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சீமான், “என்னையும், தம்பி விஜய்யையும் பற்றி ‘ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள்’ என என் அண்ணன் திருமாவளவன் கூறியிருக்கிறார். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் எங்களை பெற்றெடுத்தபோது, அவர் அருகில் இருந்து பிரசவம் பார்த்தவர்தான்” என்று விமர்சனமாகக் கூறினார்.

மேலும், காலம் காலமாக தன்னை ‘போலி தமிழ் தேசியவாதி’ என திருமாவளவன் விமர்சித்து வருவதாகவும், “அண்ணன்தானே பேசுகிறார். அதை விடுங்கள்” என தெரிவித்தார்.